Home to Biloela என்ற நூலைச் சென்ற வாரம் ஒலிப்புத்தகமாகக் கேட்டு முடித்தேன். சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு சிப்பிலியாடப்பட்ட பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். அவர்களின் துன்பகரமான பயணத்தை ரெபேக்கா ஹோல்டு, நிரோமி டி சொய்சா போன்றவர்களின் உதவியோடு பிரியா முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். பிரியாவின் பார்வையில் பிரதானமாக நகரும் இந்நூலில் அஞ்செலா, ரொபின் அந்தக் குடும்பத்தின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த பலரின் வாக்குமூலங்களும் இந்தப் போராட்டம் எப்படி அந்தச் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைகளை மாற்றியமைத்தது பற்றியும் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது.