Skip to main content

பிரியாவின் கதை



Home to Biloela என்ற நூலைச் சென்ற வாரம் ஒலிப்புத்தகமாகக் கேட்டு முடித்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு சிப்பிலியாடப்பட்ட பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். அவர்களின் துன்பகரமான பயணத்தை ரெபேக்கா ஹோல்டு, நிரோமி டி சொய்சா போன்றவர்களின் உதவியோடு பிரியா முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். பிரியாவின் பார்வையில் பிரதானமாக நகரும் இந்நூலில் அஞ்செலா, ரொபின் அந்தக் குடும்பத்தின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த பலரின் வாக்குமூலங்களும் இந்தப் போராட்டம் எப்படி அந்தச் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைகளை மாற்றியமைத்தது பற்றியும் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஈழத்தின் அம்பாறை மாவட்டத்திலிருக்கும் இறக்காமம் கிராமத்தில் 1976ம் ஆண்டு பிரியா பிறக்கிறார். பிரியாவின் குடும்பம் இந்திய வம்சாவளிப் பின்புலத்தைக் கொண்டது. எண்பதுகளில் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி கிராமத்துக்கு இடம்பெயருகிறார்கள். போகுமிடமெல்லாம் போரின் கொடுமைகளைச் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களது குடும்பம் கொழும்புக்குப் புலம்பெயருகிறது. பின்னர் அங்கிருந்து திருச்சிக்கு. திருச்சியிலிருந்து செங்கல்பட்டுக்கு. இப்படிப் புலம் பெயர்வுகள் பிரியாவின் வாழ்வின் நிலையான நிகழ்வுகளாயின. செங்கல்பட்டில் சில ஆண்டுகள் கழித்தபின்னர் கேரளாவுக்குப் போய், அங்கிருந்து படகேறி அவுஸ்திரேலியா நோக்கிப் பிரியா பயணமாகிறார். தன் முப்பதுகளில் ஒரு பெண், முன்பின் அறிமுகமேயில்லாத மனிதர்களோடு தனியாகப் படகேறி, பெயரளவில் மாத்திரமே கேள்விப்பட்ட, தெரிந்தவர்கள் எவருமேயில்லாத ஒரு பெரு நிலத்தை நோக்கிய பயணிக்கிறார் என்பதை அறியும்போதே முள்ளந்தண்டு சில்லிடுகிறது அல்லவா? பதினான்கு நாட்கள் நீண்ட அந்தக் கொடிய கடற் பயணத்தின் பின்னர் அவர்களின் படகு அவுஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் கொக்கோஸ் தீவுகளைச் சென்றடைகிறது. அங்கிருந்து பிரியா கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். சில மாதங்கள் கிறிஸ்துமஸ் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுப் பின்னர் தற்காலிக விசாவோடு பிரியா சிட்னிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்.

சிட்னியில் வாழ்ந்த நாள்களில்தான் பிரியாவுக்கு நடேசலிங்கத்தின் தொடர்பு கிடைக்கிறது. பிரியா இந்நாட்டுக்கு வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர்தான் நடேசும் படகுமூலம் அவுஸ்திரேலியா வந்திருக்கிறார். இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். இரு மனங்கள் ஒப்பவே, விரைவிலேயே அவர்களின் திருமணமும் நிகழ்கிறது. நடேஸ் அப்போது அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாநிலத்திலிருக்கும் ஒரு சிற்றூரில் நண்பர்களோடு தங்கியிருந்து, அங்குள்ள இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் பணி புரிந்துகொண்டிருக்கிறார். திருமணமானதும் பிரியாவும் அந்த ஊருக்கு வருகிறார். வெறும் ஐயாயிரம் மனிதர்களே வசிக்கும், பெரு நகரங்களிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும், பெரும்பான்மை அவுஸ்திரேலியர்கள்கூட அறியாத மிகச்சிறிய ஊர் அது.

அந்த ஊரின் பெயர்தான் பிலோலா.

பிலோலா என்றால் பூர்வீகக் குடிகளின் மொழியில் கொக்கட்டூ பறவையைக் குறிக்குமாம். கொக்கட்டூ பறவை மிக அழகானது. ஆனால் அது குரலெடுத்து அலற ஆரம்பித்தால் அதன் கீச்சுச் சத்தத்தில் ஊரே நடு நடுங்கிப்போகும். பிலோலாவில் புதிதாகக் குடியேறியிருக்கும் இந்த இளம் தம்பதியினர் இயல்பாகத் தம் வாழ்க்கையை ஒரு புதிய நிலத்தில் ஆரம்பிக்கின்றனர். அவர்களுக்குக் கோபிகா என்ற மிக அழகான பெண் குழந்தை பிறக்கிறது. அடுத்த இரண்டே வருடங்களில் தாருணிகாவும் பிறக்கிறாள். நடேசும் பிரியாவும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்து மொத்தமாக இப்போது ஐந்து வருடங்களாகிவிட்டன. கோபிகாவுக்கு இரண்டு வயது. தாருணி கைக்குழந்தை. அமைதியான ஒரு சிற்றூரிலே நிம்மதியான ஒரு வாழ்க்கை தமக்கு ஈற்றிலே அமைந்துவிட்டது என்ற மகிழ்ச்சி மெல்ல மெல்ல அவர்களுக்குப் பிடிபடுகிறது.

இந்தச் சூழலில்தான் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவர்களது தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து அந்தக் குடும்பத்தைப் பந்தாடத்தொடங்குகிறது.

ஒரு நாள், திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் அவர்களது வீட்டுக்கு வந்து, அவர்களுடைய விசா காலாவதியாகிவிட்டது என்று சொல்லி, பிலோலாவிலிருந்து மெல்பேர்னில் இருக்கும் தடுப்பு முகாமுக்கு அவர்களைப் பிடித்துச் செல்கிறார்கள். பெயருக்குத்தான் தடுப்பு முகாம் என்றாலும் அது ஒரு சிறைச்சாலைதான். அங்கே ஒன்றரை வருடங்களாக அந்தக் குடும்பத்தை அரசு சிறைபிடித்து வைத்திருந்தது. பின்னர் அங்கிருந்து டார்வினுக்கு அவர்களைக் கூட்டிச்செல்கிறார்கள். டார்வினிலிருந்து பின்னர் கிறிஸ்துமஸ் தீவுக்கு. மொத்தமாக நான்கு வருடங்கள், ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கொடுமையான பயங்கரவாதிகளை நடத்துவதுபோல அந்தக் குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் தனிச்சிறையில் எல்லாம் வைத்துத் துன்புறுத்துகிறது. அவுஸ்திரேலிய மண்ணில் பிறந்து, ஒன்பது மாதங்களில் சிறை பிடிக்கப்பட்ட தாருணிகா, தனது முதல் நான்கு பிறந்த நாட்களையும் சிறைச்சாலையில்தான் கொண்டாடுகிறாள். கோபிகாவின் நிலையும் அதுதான். டார்வின் விமான நிலையத்தில் தரதரவென அவுஸ்திரேலிய அதிகாரிகள் பிரியாவை இழுத்துச்செல்வதையும் கோபிகாவும் தாருணிகாவும் அம்மாவின் கோலத்தைக்கண்டு அச்சத்தில் கதறுவதையும் நாமெல்லாம் காணொளிகளில் பார்த்து பதைபதைத்திருப்போமல்லவா? அந்த அனுபவத்தை முழுமையாகப் பிரியா நூலிலே சொல்லும்போது நமக்கு மீளவும் ஒருமுறை நெஞ்சு அடித்துக்கொள்ளுகிறது.

கிறிஸ்துமஸ் தீவிலே அவர்கள் எவ்வளவு மோசமான சூழலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். அந்தத் தீவிலே வாழுகின்ற ரொபின் என்பவர் தன் குழந்தைகளை அழைத்துச்சென்று கோபிகாவையும் தாருணிகாவையும் பார்க்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறார். ஆனால் அந்தச் சிறைச்சாலை அவுஸ்திரேலியக் குழந்தைகள் செல்வதற்குப் பாதுகாப்பானதும் தோதுமான இடம் அல்ல என்று சொல்லி அரசாங்கம் அவரின் கோரிக்கையை இழுத்தடிக்கிறது. இறுதியில் சிறைச்சாலைக்கு வெளியே ஒரு பூங்காவில் காவலர் மத்தியில் சந்திக்கலாம் என்று அனுமதி கொடுக்கிறது. அவுஸ்திரேலியக் குழந்தைகள் ஒரு சில மணி நேரம்கூட போவதற்குப் பாதுகாப்பில்லாத ஒரு சிறைச்சாலையில் குழந்தைகளான கோபிகாவையும் தாருணிகாவையும் இந்த அரசாங்கம் ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்திருந்தது என்பது கொஞ்சங்கூட ஈவு இரக்கமற்ற மனித உரிமைகளை மீறும் செயல் அல்லவா? ஆனாலும் பிரியாவின் ஓர்மம், பிலோலா என்று சிறு ஊரிலிருக்கும் அற்புதமான மனிதர்களின் தொடர் போராட்டம், அதற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா முழுதும் எழுந்த குரல்கள், மத்தியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் என எல்லாம் சேர்ந்து கடைசியில் அந்தக் குடும்பத்துக்கு இந்த நிலத்தில் நிரந்தரக் குடியுரிமையை வாங்கிக்கொடுத்திருக்கிறது.

எனக்குப் பிரியா, நடேஸ் குடும்பத்தின் மொத்தப் போராட்டத்தையும் இங்கே எழுத ஆசைதான். ஆனால் அது நூலாக வந்திருப்பதால் தவிர்க்கிறேன். எங்கோ அம்பாறையிலிருக்கும் சிறு கிராமத்தில் பிறந்த ஒரு குடும்பத்தின் தஞ்சக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பெரும்பான்மை அவுஸ்திரேலியச் சமூகமும் கிளர்ந்தெழுந்து தமது அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது என்பதை இந்த நிலத்தின் வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகவே பார்க்கிறேன். இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே தம் சிறு கையெழுத்து மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்த்திருக்கமுடியும். ஆனால் அகதிகளுக்கெதிரான கடும்போக்காளர்களான பீட்டர் டட்டனும் அப்போதைய பிரதமரான ஸ்கொட் மொரிசனும் தலையே போனாலும் இந்தக் குடும்பத்துக்கு விசா கொடுக்கமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தார்கள். ஒரு கட்டத்தில் இது அதிகாரத்திலிருக்கும் சில மனிதர்களின் ஈகோ பிரச்சனையாகவே மாறிவிட்டது. தம் சக அமைச்சர்களின் அறிவுரையைக்கூட அவர்கள் கேட்கவில்லை. பின்னர் வந்த தேர்தலில் அவர்களது கொடுமையான ஆட்சியை மக்கள் மொத்தமாகக் கலைத்துவிட்டனர். புதிய அரசாங்கமும் தான் ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே பிரியா குடும்பத்துக்கு விசா அனுமதி கொடுத்து, அவர்கள் பழையபடி பிலோலாவுக்கு செல்லவும் வழி வகுத்தது.


Home to Biloa நூலை வாசித்ததும் இன்றைக்குப் பிரியா குடும்பம் எப்படி வாழ்கிறது என்ற ஆர்வத்தில் இணையம் முழுதும் அவர்களைத் தேடிப்பார்த்தேன். அவர்கள் இன்னமும் பிலோலாவில்தான் வசிக்கிறார்கள். பிரியா தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு மரக்கறித்தோட்டம் வைத்திருக்கிறார். அங்கே கதலி வாழை குலை போடுவதைக் காண்கிறேன். சாடிகளில் கத்தரிக்காய் காய்த்துத் தொங்குகிறது. சின்ன வெங்காயம்கூட விளைகிறது. நடேஸ் சிறப்பாகச் சமைப்பார் என்று நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. சொன்னதுபோலவே அவர்கள் இப்போது Priya Nades Kitchen என்று ஓர் உணவு ஊர்தியை உருவாக்கியிருக்கிறார்கள். தோசை, வடை, ரோல்ஸ் என்று நம்ம ஊர் ஐட்டங்கள் பிலோலாவிலிருக்கும் உணவு வண்டியில் கிடைக்கிறது. அவற்றைப் பார்க்கும்போது என்னையறியாமலேயே கண்கள் மெல்லக் கலங்கிவிட்டது. உடனேயே அவர்களை முகநூலினூடாகத் தொடர்புகொண்டு சுகம் விசாரித்து, அவர்களது அனுபவத்தை நம்மோடு புத்தகமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி சொல்லி செய்தி அனுப்பினேன்.

அடுத்த ஐந்தாவது நிமிடமே பிரியாவிடமிருந்து அழைப்பு வந்தது.

எனக்கு யாராவது திடீரென்று அழைப்பு எடுத்தால் என்ன பேசுவது என்ற சங்கடம் வந்துவிடும். ஆனால் பிரியா அந்தச் சங்கடத்துக்கு இடமே கொடாமல் மிக நட்போடு உரையாடினார். நடேசும் கூடவே இருந்தார். அவர் சுபாவத்துக்கு அமைய ஓரிரு வார்த்தைகள்தான் அவரிடமிருந்து வந்தது. அரை மணி நேரமாகப் பிரியாவே பேசினார். குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றார்கள் என்றார். கடை எப்படிப் போகிறது என்று கேட்டேன். உணவு வண்டிக்குள்தான் இருந்து பேசுகிறோம் என்று சிரித்தார். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ரொபின், அஞ்செலா எனப்பலரையும் விசாரித்தேன். அவர்களுடைய போராட்டத்தில், நான் மிகவும் ஆழமாக நேசிக்கும் சமூகப் போராளியான அரன் மயில்வாகனத்தின் பங்கும் மிக அதிகம். பிரியா அரனைப்பற்றி நிறையப் பேசினார். உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததைவிட அதிகமாகவே அவர் எங்களுக்குச் செய்திருக்கிறார் என்றார். அரனின் இயல்பு அது. மற்றவரை முன்னால் நிறுத்திப் பின்னிருந்து பாடுபடும் மனிதர் அவர். ஆயினும் ஒரு சிலரைத்தவிர, இந்தப் போராட்டத்தில் ஏனைய இனத்தவர் கொடுத்த அளவுக்குப் பெரும்பான்மைத் தமிழர்கள் தமக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் பிரியாவுக்கு இருக்கிறது. நம்மாட்கள் விசா கிடைத்ததும் வேறு சோலியைப் பார்க்கப்போய்விடுகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் குடும்பம், தங்கள் பிள்ளைகள்தான் வாழ்க்கையாகிறது. அவர்களது சமூகத்தில் ஏனையவர்கள் படும் பாடுகளைப் பற்றிய கரிசனங்கள் இல்லை என்றார். அது உண்மைதான். இந்தப் பன்னாடைப் பனங்கொட்டை சமூகத்திடம் வேறு எதைத்தான் எதிர்பார்க்கமுடியும் என்று எனக்கு வாய் உன்னியது. ஆனால் சொல்லவில்லை.

பிரியாவின் விடாப்பிடியான போராட்ட ஓர்மத்தை நான் வியந்து சொல்ல, தான் இயல்பிலே அப்படியான சுபாவம் கொண்டவரில்லை என்றார் அவர். தன் தாயிடம்கூட ஒரு சொல்லு எதிர்த்துப் பேசாத ஆளாம் அவர். ஆனால் அவுஸ்திரேலிய அரசாங்கமும் காவலர்களும் அவரை அங்குமிங்குமாகப் பந்தாடியதில் சாது மிரண்டுவிட்டது. தனக்கு மட்டும் ஆங்கிலம் நன்றாக வருமென்றால் அடுத்த தேர்தலிலேயே நின்று சிலதைப் பேசவேண்டும் என்று அவர் ஆதங்கப்பட்டார். விட்டால் மனிசி நெருப்பெடுக்கும்போலத்தான் தெரிந்தது. கீச்சிக்கொண்டு பறக்கும் கொக்கட்டூ பறவைபோல. அவர்கள் தடுப்பிலிருந்த காலத்தில் அவருடைய தந்தை இந்தியாவில் காலமாகினார். தாய் இப்போது நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் போய்ப் பார்க்கமுடியாத சூழல் என்று நினைக்கிறேன். தமக்கு அவுஸ்திரேலியக் குடியுரிமை கிடைக்க இன்னமும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள், நாட்கள் இருக்கின்றன என்று அவர் கணக்கு வைத்துச்சொன்னார். அவர் சொல்லும்போது எனக்கு அடிவயிறு மறுபடியும் கரைந்தது.

அவுஸ்திரேலியாவில் இந்த வாரம் மீண்டும் தேர்தல் வருகிறது. பிரியா குடும்பத்துக்கு அத்தனை துன்பம் கொடுத்த முக்கிய பங்காளிகளில் ஒருவரான பீட்டர் டட்டன் இம்முறை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்தலில் சந்திக்கிறார். கிட்டத்தட்ட உலகம் முழுதும் பிரபல்யமாகிக்கொண்டிருக்கும் தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பூசி மெழுகி நம்முன்னே கொண்டுவந்து வைக்கிறார். தற்போதைய ஆளுங்கட்சியான லேபர் கட்சிதான் பிரியா குடும்பத்தின் தஞ்சக் கோரிக்கைக்கு ஈற்றில் அனுமதி கொடுத்தது. ஆனால் அவர்களின் கடந்த மூன்றாண்டு ஆட்சியில் பல தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. என்னுடைய பல நண்பர்கள் பத்தாண்டுகளாக விசா இன்றி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு ஊரில் மனைவி பிள்ளைகளுமிருக்கின்றார்கள். பலர் மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சிகளும் செய்துள்ளனர். மனோ யோகலிங்கம் என்ற இளைஞன் இயலாக்கட்டத்தில் தன்னைத்தானே தீக்கிரையாக்கி மரணித்த சம்பவத்தை நாம் மறந்திருக்கமாட்டோம். அகதிகள் நலனுக்காகப் போராடும் அமைப்புகளும் தன்னார்வத் தொண்டர்களும் தொடர்ச்சியாக அரசுக்கெதிராகப் போராட்டங்களை நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் இங்கே எதுவுமே பெரிதாக மாறவில்லை என்பதுதான் உண்மை. சில கட்சிகள் மிதவாதப் போர்வையை இட்டு ஆட்சி செய்யும். சிலது கடும்போக்கையே பெருமையாகச் சொல்லி ஆட்சி புரியும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை என்னவோ ஒன்றுதான். அது பூர்வீகக்குடிகளாக இருக்கட்டும். தஞ்சம் கோரி நாட்டுக்கு வந்து சிறையில் வாடுபவர்களாக இருக்கட்டும். துன்பம்தான்.

உலகெங்கிலும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை எந்த அதிகாரங்களும் எப்போதும் தானாக வலிந்து கொடுத்ததாகச் சரித்திரமில்லை. அதிலும் பெரும்பான்மையை முன்னிறுத்தும் சனநாயக அரசமைப்புகளில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் எப்போதுமே போராடாமல் கிடைத்துவிடாது. நாம் அனுபவிக்கும், அனுபவிக்கப்போகும் ஒவ்வொரு உரிமையும் போராட்டங்களினூடாக, போராளிகளினூடாகத்தான் நம்மை வந்தடைந்தது. நாம் நன்றி சொல்லி, கொண்டாடி, உறுதுணையாக நிற்கவேண்டியது அவர்களுக்கேயன்றி அரசுகளுக்கு அல்ல. இந்த நூல் சொல்லும் பாலபாடமும் அதுதான். உரிமைகளுக்கான போராட்டம் என்பது மனித உழைப்பை வேண்டிய, மன உளைச்சலைக் கொடுக்கக்கூடிய நீண்ட நெடிய போராட்டமாகும். என்றாவது ஒரு நாள் அந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள இயலாமல் அதிகாரம் வழிக்கு இறங்கி வரும். அப்போதும் ஏதோ தான்தான் மக்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்ற பெருமிதத்தையும் தானே அது வலியச் சூடிக்கொள்ளும். வரலாறு முழுவதும், உலகம் பூராவும் உரிமைகளுக்கான போராட்டங்களின்போது அதுதான் நிகழ்கிறது. அந்த ஒரு காரணத்தினால்தான் நாங்கள் எப்போதும் அதிகாரத்துக்கும் அரசாங்கத்துக்கும் குடை பிடிக்காமல் அவற்றை எதிர்த்துத் தம் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளுக்காகவும் மனிதர்களுக்காகவும் ஆதரவு செலுத்தவேண்டும். பிரியா குடும்பத்தின் மீட்சிக்காக அரசாங்கத்திடம் இறைஞ்சிப் பயனில்லை என்பது பிலோலா ஊரவருக்கும் அகதிகள் நலனுக்காகப் போராடுபவர்களுக்கும் உடனேயே புரிந்துவிட்டது. அந்தக் குடும்பத்தை எவரும் தொடர்புகொள்ளமுடியாமற் போன கணத்திலேயே அவர்கள் சுதாகரித்துத் தம் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு முனைகளில் தமது போராட்டத்தை விரிவுபடுத்தினர். அப்படியிருந்தும் நான்கைந்து ஆண்டுகள் கழித்துத்தான் அந்தக் குடும்பம் மறுபடியும் தம் பிலோலா கிராமத்துக்குத் திரும்ப முடிந்தது. இரண்டு குழந்தைகளைக்கொண்ட ஓர் ஏதிலிக் குடும்பத்துக்குக் கிடைக்கவேண்டிய மிக அடிப்படை உரிமைகூட இத்தனை போராட்டங்களுக்குப் பிறகுதான் வந்து சேருகிறது என்றால் சிக்கலான உரிமைப்போராட்டங்களின் நிலையை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

நண்பர்களே. எங்காவது யாரோ ஒரு மனிதரோ அல்லது அமைப்போ தொடர்ச்சியாக உரிமைக்குரல் கொடுத்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து நாங்கள் எவரும் அவர்களை எள்ளி நகையாடக்கூடாது. சாத்தியமற்ற உளறல்கள் அவை என ஏளனம் செய்யலாகாது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை அடிமைத்தனத்துள் ஒடுக்கப்பட்டுக்கிடந்தபோது, தமக்கும் ஒரு நாள் விடுதலை கிடைக்குமென்றோ அல்லது ஐக்கிய அமெரிக்காவுக்கு அவர்களுள் ஒருவரே சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார் என்றோ கறுப்பினத்தினர் நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள். இந்திய உபகண்டத்தின் தாழ்த்தப்பட்ட சமூகம் எதிர்காலத்தில் தமது வாழ்வு கொஞ்சமாவது முன்னேறும் என்று ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன்னர்கூட எண்ணிப் பார்த்திருப்பார்களா என்ன? ஓட்டுரிமைகூட வழங்கப்படாத நிலையிலிருந்த பெண்களின் வாழ்க்கைத்தரம் இன்று தம் உடல், தம் தெரிவு என்று முடிவெடுக்கும் நிலையை எப்படி வந்தடைந்தது? இவை எல்லாம், சிந்தித்தே பார்க்கமுடியாத, சாத்தியமற்ற புள்ளிகளாக இருந்த கணத்தில் யாரோ பல மனிதர்கள் போராடிய தொடர் போராட்டத்தின் விளைவுதான். அப்போதும் போராடியவர்களைவிட வெறுமனே வாளாவிருந்து ஏளனம் செய்தவர்களே பெரும்பான்மையினராக இருந்திருப்பார்கள். தம் அன்றாட லோகியல் இலாபங்களுக்காக அதிகாரத்துக்கு அவர்கள் துணை போயிருப்பார்கள். ஆனால் நாம் இன்றைக்கு அனுபவிக்கும் மாற்றங்கள் எல்லாமே, அன்று போராடிய ஒரு சிறுபான்மையான செயற்பாட்டுக் குழுக்களால்தான் சாத்தியமாகியிருக்கும். இன்றைக்கும் நம்மைச் சுற்றி அனுதினமும் உரிமை மீறல்களும் ஒடுக்குமுறைகளும் பலருக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கும் நிகழ்கிறது. இதற்கு எதிராகப் போராடி என்ன பலன் என்று நம்மில் பலர் இப்போதும் யோசிக்கக்கூடும். அதையெல்லாம் மீறி ஒரு கூட்டம் நம் உரிமைகளுக்காக உவத்தல் காய்த்தல் இன்றிக் குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. வீதியில் இறங்குகிறது. போராடுகிறது. அவர்கள்தான் நம் சமூகத்தின் முதன்மையான தலைவர்கள். சமூக முன்னேற்றத்தின் தலை மக்கள். மானுடத்தின் காவலர்கள்.

அன்றைக்குப் பிரியாவோடும் நடேசோடும் பேசி முடித்த பின்னரும் நீண்ட நேரமாக மனம் அவர்களையே நினைத்துக்கொண்டிருந்தது. அது ஒரு மழை நாள் வேறு. எங்கள் தெருவின் நடை பாதையோரம் வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களில் பல வண்ணத்துக் கொக்கட்டூப் பறவைகள் கூடு கட்டி வாழுகின்றன. நீண்ட கோடைக்குப் பின்னரான மழை நாள் அது ஆதலால் அத்தனை கொக்கட்டூகளும், ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்று உற்சாக மிகுதியில் இரைந்துகொண்டேயிருந்தன. என் மனம் பிலோலாவிலேயே தரித்து நின்றது.

பிலோலாவில் இருக்கும் தம் வீட்டுக் கொல்லைப்புறத்தில் கோபிகாவும் தாருணியும் விளையாடிக் களிக்கிறார்கள். பிரியா தன் தோட்டத்துக் கத்தறிக்காய்களைப் பறித்துக் கூடையிலே சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமையலறையில் அன்றைக்கு உணவு ஊர்தியில் தோசை ஊற்றுவதற்காக நடேசு மாவு அரைத்தபடியே யன்னல் வழியே அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். கூரை முகட்டில் கொக்கட்டூகள் கூடி அமர்ந்து விடுப்பு பறைந்துகொண்டிருந்தன. என் மனக்கண் முழுதும் அந்த அற்புதக் காட்சி விரிந்துகொண்டேயிருந்தது.

அந்தக் கணம், உலகெங்கும் உரிமைகளுக்காகப் போராடிய, போராடுகின்ற, போராடப்போகும் அத்தனை செயற்பாட்டாளர்களையும் மானசீகமாகத் தலை சாய்த்து நன்றி சொல்லவேணும்போல மனம் ஏங்கியது.

அன்பும் நன்றியும்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”