கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப