வலி உயிரைத் தின்ன ஆரம்பித்தபோது அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு சிறிது தூங்கி எழலாம் என்று புரண்டும் திரும்பியும் படுத்து, பல மணி நேரம் கழித்து எழுகிறோம் என்று நினைத்து மறுபடியும் மணிக்கூட்டைப் பார்த்தால் வெறுமனே பத்து நிமிடங்கள்தான் கழிந்திருந்தன. வலிக்கு அந்தப் பண்பு உண்டு. அது காலத்தை மெதுவாக நகர்த்த வல்லது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்துப்பார்த்தேன். ஒரு நூலை எடுத்து இரண்டு பக்கங்களைப் புரட்டினேன். டிவி ரிமோட்டை உருட்டிக்கொண்டிருந்தேன். செல்பேசியின் செயலிகளுக்குப் போய் வந்தேன். இளையராஜா கேட்டேன். இசை ஒரு வலி நிவாரணி என்றவரைத் தேடிச் சென்று வெளுக்கவேண்டும்போல இருந்தது.