“சமுத்திரத்தின் மிக மிக ஆழத்தில், சூரிய ஒளியின் பிரசன்னமே இல்லாத ஒரு குகையினுள் நீந்தித் திரிந்த மீனுக்கு கண்கள் இருந்தன” ஏப்ரில் - மகிழ் அம்மாவின் மரணம் நிகழ்ந்து அன்றோடு நான்காவது நாள் ஆகிவிட்டிருந்தது. ஏப்ரில் அழக்கூடத் திராணியில்லாமல் அறைக்குள்ளேயே எந்நேரமும் ஒடுங்கிக் கிடந்தாள். எக்காரணம் கொண்டும் சிங்கப்பூர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி ஊரில் எவரோடும் பேசவே மறுத்தாள். அம்மாவை, இருபதாவது மாடியிலிருந்து விழுந்து சிதைந்த அவரின் உடலை அவளுக்குப் பார்க்கவே தைரியம் இருக்கவில்லை. அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய சூதாடி அப்பாவை, மோசமான தம்பியை, அந்த நாட்டின் வாழ்க்கையை நினைக்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அந்தக் கொங்கிரீட் காட்டுக்குள் திக்குத்தெரியாமல் தவித்த இரண்டே சீவன்கள் தானும் அம்மாவும்தான் என்று சொல்லிப்புலம்பினாள். அவளாவது படித்து வெளியேறி இன்னொரு நாட்டில் புகலிடம் தேடிவிட்டாள். அம்மாதான் பாவம். ‘நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தீர்கள் மமா, இங்கு வந்து ஆங்கிலத்தையும் படிக்கப்போகிறேன் என்றீர்களே’ என்று அரற்றியபடியே இருந்தாள். அம்மா அவளுக்காகத்தான் எல்லாவற...