கடந்த சில வாரங்களாக நான் திரும்பத் திரும்பக் கேட்டு லயித்துக்கிடக்கும் பாடல்கள் பொன்னியின் செல்வனுடைய பாடல்கள். தலைவர் ரகுமான் எப்போதும்போல நெருப்பெடுத்திருக்கிறார். என் ரசனையின் அடிப்படையில் ரகுமான் என்றைக்குமே அவுட் ஓஃப் போர்மில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு அண்மையில் வெளியான “தமிழ் நாட்டின்” வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல், கோப்ரா, மலயான் குஞ்சு, அற்றாங்கி ரே எல்லாமே அட்டகாசம். அதற்கும் முன்னர் வந்த 99 Songs பற்றி பேசவே தேவையில்லை. என்ன ஒன்று பலருக்கு ஒரு இசைத்தொகுப்பை ஆற அமர இருந்து, திரும்பத் திரும்பக் கேட்பதற்கு இப்போதெல்லாம் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. முன்னர் வானொலிகள் அந்த வேலையை எமக்குச் செய்துகொண்டிருந்தன. இப்போது நாமே பாடல்களைத் தெரிவுசெய்து கேட்பதால் ஒன்று பழைய பாடல்களையே திரும்பவும் தெரிவு செய்கிறோம். அல்லது வைரலாக சுற்றும் பாடல்களைக் கேட்கிறோம். புதிய ரகுமான் பாடல்கள் இவற்றுக்கிடையில் என்னைப் போன்ற ரசிகர்களிடம் மாத்திரமே சென்று சேர்கின்றனவோ தெரியாது. பொன்னியில் செல்வனில் ரகுமான் தனியாக ஒரு தேவராளன் ஆட்டமே ஆடியிருக்கிறார். பொன்னி நதி, காதொடு சொல், அலை க...