காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார். ‘லாம்புக்கா? அடுப்புக்கா?’ ‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’ காசிம் பாவா உற்சாகமடைந்தார். ‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’ ‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’ ‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’ ‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உதவாதவன், கொலைகாரன் என்று தெரிந்துதானே வாக்களித்து அனுப்பினோம். அவன் தன்னிலை மாறவில்லை. உண்மையில் எரிப்பதாக இருந்தால் அவனைத் தேரில ஏத்திவிட்ட எங்கள் வீடுகளைத்தானே எரிக்கவேண்டும்? அதைத்தான் செய்யப்போகிறேன்’ மாதனமுத்தா சொன்னதைக் கேட்டதும் டென்சனாகிய காசிம் பாவா வரிசையில் கொஞ்சம் பின் தங்கிவிட்டார். நாள் முழுதும் வரிசையில் நின்று ஒருவாறாக அரைப்போத்தில் எண்ணெயை வாங்கியபடி மாதனமுத்தா வீட்டுக்குத் திரும்பியபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. மின் வெட்டும் வந்து சேர மாதனமுத்தாவின் மனைவி விளக்கை ஏற்ற...