சிட்டுவேசன் ரூமை நிலாப்தீன் வியப்போடு சுற்றிச் சுற்றி வந்தார். அறைச் சுவர்கள் முழுதும் பத்திரிகைத் துணுக்குகளும் இணையச் செய்தித்தளங்கள், முகநூல், டுவிட்டர், வைபர் போன்ற சமூக ஊடகங்களில் வந்த அலசல்கள் எனப் பலவும் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு கொலைச் சம்பவமும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேயப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர் விபரம், பிறந்த ஊர், வாழும் ஊர், குடும்பச்சூழல், சொத்து, மதம், சாதி, கொலை நிகழ்ந்த இடம் என எல்லாத் தகவல்களும் திரட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் கோடுகளால் இணைக்கப்பட்டுக் காரணங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.