கடந்த சில நாட்களாக மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இது. நூறு வருடங்களுக்கு முன்னாலே ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. நாம் எல்லோருமே ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஈர்ப்பு அலைகள்? வெண்முரசு நீளத்துக்குப் பாகம் பாகமாக விவரிக்கவேண்டியதை அம்புலிமாமா சைசுக்குள் சுருங்கச்சொல்ல முயல்கிறேன். ஈர்ப்பு அலைகளை விளக்குவதற்குமுன்னாலே சார்பு விதிகளைப்பற்றி மேலோட்டமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் 100km/h வேகத்தில் செல்லும் ஒரு ரயில் வண்டியினுள்ளே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னே உசைன் போல்ட் உட்கார்ந்திருக்கிறார். ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு ரயில் கண்ணாடிகளை மூடிவிட்டால் அதனை உணர்வது கடினம். முன்னே உட்கார்ந்திருக்கும் உசைன் போல்ட் 100km/h வேகத்திலே பயணம் செய்வதுபோலவும் உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில் நீங்கள் இருவருமே ரயிலுக்குள் இருப்பவர்கள். ரயிலின் சட்டத்தில் நீங்கள் இருவரும் நிலையாக இருக்கிறீர்கள். சீரான வேகத்தில் இயங்கு...