“ அம்மோய் .. குரங்கு வந்திட்டுது ” தகப்பனினுடைய மோட்டர்சைக்கிளின் சத்தம் கேட்கவும் அதற்காகவே காத்திருந்தவன்போலத் தம்பியன் கேற்றடியை நோக்கி ஓடினான் . பின்வளவில் உடுப்புக் காயப்போட்டுக்கொண்டிருந்த அவனின் தாய்க்காரியும் போட்டது போட்டபடியே முற்றத்துக்கு விரைந்தார் . பக்கத்து வீட்டு மதில்களுக்கு அப்பாலிருந்தும் பல தலைகள் அவசரமாக எட்டிப்பார்த்தன . தம்பியன் போய்க் கேற்றை வேகமாகத் திறந்துவிடவும் மோட்டர்சைக்கிள் முற்றத்துக்குள் நுழைந்தது . எல்லோர் கண்களும் அதன் பின் சீற்றிலிருந்த கூட்டையே பின்தொடர்ந்தன . வீட்டுப் போர்டிகோவில் மோட்டர் சைக்கிள் போய் நிற்கவும் பின்னாலேயே ஓடிவந்த தம்பியன் , அந்தக்கூட்டின் அருகே போய் , அதை மூடிக்கட்டியிருந்த சாக்கினைச் சற்று விலத்திப் பார்த்தான் . உள்ளே , ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் , மிரட்சியோடு கண் சிமிட்டாமல் அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தது அந்தக் குரங்கு .