கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது, சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே! இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது....