ஐந்தாம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு. ரிசல்ட்ஸ் பார்க்கப்போன அப்பா திரும்பும் நேரம். சென்ஜோன்ஸ் கல்லூரி அனுமதிக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் என மூன்று பாடங்கள். மொத்தமாக அறுநூறு மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் வெறும் முப்பத்தைந்து பேர்களை மாத்திரமே தெரிவு செய்வார்கள். வீட்டில் நம்பிக்கையில்லை. எனக்கோ அந்த கதீடறல் கட்டிடக்கலையும், பிரின்சிபல் பங்களோவும், ஐந்தடிக்கு ஒன்றாய் நிற்கும் மகோகனி மரங்களில் தெறிக்கும் ஒரு வித ஆங்கில வாசமும், இது தான் என் பாடசாலை என்ற எண்ணத்தை வேரூன்றவைத்துவிட்டது. வந்த அப்பாவின் முகம் சரியில்லை. இரண்டு புள்ளிகள். மயிரிழை .. அரும்பொட்டு என்று ஏதோதெல்லாம் சொன்னார். கத்த ஆரம்பித்து, அழுது கண்ணெல்லாம் சிவந்து படுக்கையறைக்குள் போய் போர்வையை மூடிக்கொண்டு, யாழ் இந்து கல்லூரியின் நுழைவுத்தேர்வு விண்ணப்பபடிவத்தை அண்ணா கொண்டுவந்து தந்தபோது கிழித்து எறிந்தது இன்னமும் சன்னமாய் ஞாபகமிருக்கிறது. கடைசியில் அப்பா யார் காலையோ பிடித்து, டொனேஷன் ஐயாயிரம் ரூபாய் எங்கேயோ கடன் வாங்கி கொடுத்து, சென்ஜோன்ஸ் கல்லூரியில் சேர்த்துவிடும்போது, முதல் நாள் வகுப்பை தவறவிட்டு இரண்டாம் நாள் தயக...