“விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்” இரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும் கவனமாக துடைத்தாள். கத்திரிக்கோலால் முனை கருகியிருந்த திரிகள் இரண்டையும் நேர்கோட்டில் வெட்டிவிட்டு, நெருப்புக்குச்சியை தட்டும்போது, தம்பி அறைக்குள் இருந்துகொண்டு “விளக்கை எடுத்தண்டு வர இவ்வளவு நேரமா?” என்று நாட்டாமை செய்தான். அவனுக்கு இன்னமும் இரண்டு மாதத்தில் ஒஎல் பரீட்சை. சலலகினி சந்தேஷயவையும் குசுமாசனதேவியையும் மனப்பாடம் செய்வதற்கு அவன் செய்யும் அலப்பறைக்கு பதிலாக தான் பேசாமல் டொக்டருக்கே படித்திருக்கலாம் என்று மேகலா சமயத்தில் நினைப்பதுண்டு. முதல் ஆளாய் அவனுக்கு தான் விளக்கு ...