நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு. “நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” அபேர்ச்சர் நன்றாக குறைத்து மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்த காட்டுப்பூவை நெருங்கி போஃகஸ் பண்ண கை தடுமாறிக்கொண்டிருந்த நேரம் தான் அந்த குரல். பரிச்சயமான குரல். இந்த காட்டில் .. நானே வழி தடுமாறி அலைந்துகொண்டிருப்பவன். இந்த இடத்தில் எவரும் இருக்கும் சிலமனே இல்லை. அதுவும் என்ன மாதிரி குரல் இது? ஆண் குரலா? பெண் குரலா? எங்கேயோ கேட்டிருக்கிறேன் இதை. எங்கே? தவிப்பில் படமெடுப்பதை நிறுத்திவிட்டு எல்லாத்திக்கிலும் பார்த்தேன். காடு. காடென்றால் அப்படி ஒரு காடு. இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியனாக என்ன துணிச்சல் எனக்கு? சரி, வழி த