ஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள். பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனாலும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி, ஆச்சி பயணம் போகிறாள். பயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் ட...