“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்...