“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான். “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req); லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.