சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது. வெட்டிக்கிடந்த வாழைமரத்தின் அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன். இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.