சுப்புரத்தினம், கிராம சேவையாளர் கி/255 வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும். கடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ... விதானையாரின் வாசற்படி வந்துவிட்டது.