அனைவருக்கும் வணக்கம். நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது; நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது, மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது. இந்த நாவலின் முதல் ஒருசில பக்கங்களை, தோல்வியடைந்த வாசகனாகவே அணுகினேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு. பின்னர் நாவலுக்குள் இழுத்துச்சென்று, என்னையும் ஒரு பாத்திரமாக்கியதன் மூலம் நடேசன் எழுத்தாளராக வெற்றியடைகிறார். என் உடைந்த மூக்கு, உடைந்த மூக்குதான்.