ரொபேர்ட் புரோஸ்ட் கவிதைகளை படிக்கும்போது கிடைக்கும் உணர்வுகளை எவரும் இலகுவில் விளக்கிவிட முடியாது. தனித்திருந்து மூழ்கி எழுந்தால் மாத்திரமே அர்த்தம் கொஞ்சம் புரியுமாப்போல இருக்கும். வாசிக்கும்போது நாமும் ரொபேர்ட்டோடு குதிரை வண்டியில் ஏறி உட்காரவேண்டியதுதான். பக்கத்திலேயே அவரும் அமர்ந்திருப்பார்.வண்டியை அமைதியாக ஓட்டுவார். பாதை போடுவது மாத்திரமே அவர் வேலை. எதுவுமே பேசமாட்டார். போகும் வழியை ரசிப்பது நம்மோடது. எப்போதாவது திடீரென்று ஒரு வசனம் சொல்லுவார். மற்றும்படி நீயே கவிதையை எழுதிக்கொள் என்று விட்டுவிடுவார். ஒரு நல்ல கவிஞன் வாசகனை கவிஞன் ஆக்குவான். ரொபேர்ட் புரோஸ்ட் தன் அத்தனை கவிதைகளிலும் அதனை செய்திருக்கிறார். தமிழில் நகுலன்அதை நிறையவே செய்திருக்கிறார். அது ஒரு இலையுதிர்கால பயணம். அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்கள், சோம்பலான பறவைகள், பச்சோந்திகளாக நிறம்மாறி மரம் பிரியும் பழுப்பு இலைகள் என்று காட்சிகள் விரியும். அவர் அமைதியாக இருப்பார். பயணத்தின்போது ஒரு மரம், தன் அத்தனை இலைகளையும் தொலைத்து, ஒரேயொரு இலையை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தது. என்னை விட்டு போகாதே பிளீஸ...