தீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது. எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில் ஆட்டிறைச்சி வாங்கியே தீரவேண்டும். அதுவும் கோண்டாவில் ஆட்டிறைச்சி. "உடுப்பு ஒண்டும் வேண்டாம், காசைத்தாங்கோ, கோண்டாவிலில பங்கொண்டு எடுப்பம்" என்று தீபாவளி புது உடுப்பை தியாகம் செய்யுமளவுக்கு கோண்டாவில் ஆட்டிறைச்சி மீதான காதல் அதிகம். தீபாவளி வருகிறதென்றாலே வாயில் பொரியல் துண்டு கடிபட்டு, மல்லி மிளகாய்க்காரத்தோடு சுரக்கும் அந்த இறைச்சிக்குழம்பு நாக்கில் புரளத்தோடங்கிவிடும். அப்படியொரு ஐட்டம் அது. ஆட்டிறைச்சிக்கறி என்பது வெறும் சுப்பனோ குப்பனோ கிடையாது.