ஒரு சின்ன சந்தேகம். தமிழை ஏன் நம் குழந்தைகள் கற்கவேண்டும்? இந்த நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம்? தமிழ் படிப்பதால் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது? லத்தீன் மொழி படித்தால்கூட மருத்துவப்படிப்பு வார்த்தைகளை புரிந்துகொள்வது இலகுவாகவிருக்கும். மாண்டரின் படித்தால் எதிர்காலத்தில் உத்தியோகங்களுக்கு பயன்படலாம். பிரெஞ்சு ஸ்பானிஷ் படித்தால்கூட வேறு நாடுகளுக்குச் செல்லும்போது சமாளிக்கலாம். தமிழை எதற்காகப் படிக்கவேண்டும்? பெற்றோர்களின் மொழி தமிழ் என்பதற்காக குழந்தைகளும் படிக்கவேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதால் படிக்கவேண்டுமா? வள்ளுவனும் பாரதியும் கம்பனும் தமிழில் இருப்பதால் தமிழைப் படிக்கவேண்டுமா? அற்புதமான இலக்கியங்கள் இருப்பதால் படிக்கவேண்டுமா? எந்த மொழியில்தான் இலக்கியங்கள் இல்லை? சமகாலத்தில் தமிழில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? யோசியுங்கள். பாரதிக்குப்பிறகு பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறமாதிரி எந்த அறிஞனுமே உருவாகாத, உருவானாலும் அப்படியான அறிஞர்களை பாடத்திடடங்களில் உள்வாங்காத, பழைமையிலே குளிர்காயும் ஒரு மொழியை எதற்கு எம் பிள்ளைகள் மெனக்கெட்டுப் படிக்கவேண்டும்?...