இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன. சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது. நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன. தேநீர் சுட்டது.