யாழ்ப்பாணம். திருநெல்வேலிச்சந்தியிலிருந்து கிழக்கே ஆடியபாதம் வீதியால் ஒரு அரைக்கட்டை சென்றதும் இடதுபக்கம் வருவது கலாசாலை வீதி. அந்தவீதியால் உள்ளே ஒன்றிரண்டு கட்டைகள் வளைந்து வளைந்து சென்றால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரும். அதற்கு இரண்டு வீடுகள் முன்னே இருக்கிறது சைவ வித்தியா விருத்திச் சங்கம். இறங்கி உள்ளேபோய்க் கேட்கிறேன். “சோ.ப சேர் இருக்கிறாரா?” “ஊற்றுக்கண்” என்று ஒரு கவிதை இருக்கிறது. நம்மூர்ப்பொங்கல் பற்றியது. நினைவு தெரிந்த நாள்முதலே கொண்டாட்டம் என்றால் அது நமக்குப்பொங்கலையன்றி வேறில்லை. பொங்கல் என்றதும் புக்கைக்கு அடுத்ததாகக் கூடவே ஞாபகத்துக்கு வருவது சீனன்வெடி. “பொடியள் வெடி சுடத் தொடங்கிவிடுவார்கள் வெடிகளில் எத்தனை வகை!” என்று ஆரம்பித்து ஒவ்வொரு வெடியாகக் கவிதை வரிசைப்படுத்தும். நூறு வெடிகளைக்கொண்ட ஆனைமார்க் வட்டப்பெட்டி. மான்மார்க் வெடி. இருபது வெடிகளைக்கொண்ட புத்தகவெடி. சின்னச் சின்ன கொச்சி வெடிகள். கந்தகத்தை நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி. ஈர்க்கு வானம். இப்படி வரிசையாக வெடிகள் விளக்கப்படும். “எத்தனை கோடி இன்பம்” என்று வெடி வெடிப்பதைக் கவிதை விளிக்கும். வெடி...