“வரேக்க சிங்களப்பேப்பர் கொஞ்சம் எடுத்தாறீங்களா? மரக்கறி சுத்திவைக்க ஒண்டும் இல்லை” தமிழ்க்கடை வாசலில் மெல்பேர்ன் நகரத்து இந்திய, இலங்கை இலவசப் பத்திரிகைகள் ஒருபக்கமாகச் சிதறிக்கிடந்தன. அநேகமானவை ஆங்கிலப் பத்திரிகைகள். சிலது சிங்களத்தில். பக்கத்திலேயே விளம்பரக்கட்டுகள். லைக்கா மொபைல் தொட்டுப் பரதநாட்டிய வகுப்புவரை அச்சடிக்கப்பட்ட விளம்பரங்கள். எல்லாவற்றிலும் பெண்கள் தெரிந்தார்கள். இந்தியப்பத்திரிகைகளில் பொட்டு வைத்திருந்தார்கள். லங்கா டைம்ஸ் முகப்புப்பக்கத்தில் திருமணவுடையில் ஒரு அழகான சிங்களத்துச் சின்னக்குயில் சிரித்துக்கொண்டிருந்தது. மெல்லிய தங்கநிறத்தில் ஸீத்ரூ சேலை அணிந்து, கழுத்தில் ஆரம், நெற்றிச்சுட்டி, நிறைந்த சிரிப்பு, சிங்களத்திகளுக்கேயுரிய மேல்நோக்கி எறியும் கண்கள் என்று, இன்னமும் சில நிமிடங்களில் புட்டவிக்கும் நீத்துப்பெட்டியைத் தலையில் அணிந்தபடி தோன்றப்போகும் கண்டிய இளவரசனுக்காகக் காத்திருக்கும் மணமகள். தூசி படிந்து, கட்டுக்குலைந்து, கால்களுக்குள் மிதிபட்டு. எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாய்ப் பொறுக்கி கார் டரங்கில் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.