மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.