மரணவீடுகளுக்கு துக்கம் பகிரச்செல்வது என்பது மிகச்சங்கடமானது. நுழையும்போதே அந்த வீட்டுக்காரர்களஒ எப்படி எதிர்கொள்வது என்று மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அனேகமான சந்தர்ப்பங்களில் இறந்தவர் நமக்கு அதிகம் பரிச்சயமானவராக இருந்திருக்கமாட்டார். சமயத்தில் அவரை நாம் நேரில் சந்தித்திருக்கவே மாட்டோம். தெரிந்தவரின் தந்தையோ, தாயோ, தாத்தாவோ, பாட்டியோ. முகத்தை எப்படி வைத்திருப்பது? எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது? அல்லது தவிர்க்கத்தான்வேண்டுமா? நம்மைக் கண்டதும் நண்பரோ, உறவினரோ அழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வது? பதிலுக்கு நாமும் அழுவது என்பது அபத்தம். வலுக்கட்டாயமாக, இல்லாத சோகத்தை வரவழைப்பதும் போலித்தனமே. இந்தச் சூழலை எப்படி நேர்மையுடன் சமாளிப்பது?