முதற்பாகம் : அருண்மொழி இரண்டாம் பாகம் : பார்த்திபன் ‘வானம் திறந்தால் மழை இருக்கும்…’ என்று பாடிக்கொண்டிருந்த சித்ராவை அப்பிள் மப்ஸ் பெண் இடைநடுவில் குறுக்கிட்டாள். “உங்கள் பாதையில் நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்றுப் பாதையில் ஒன்றில் மூன்று நிமிடங்கள் சீக்கிரமாகவே செல்லலாம். மாற்றப்போகிறீர்களா?” நிரோஜன் ‘நோ’ என்று சொல்லவும் அந்தப்பெண் எந்தச் சுழிப்புமில்லாமல் நன்றி சொல்லி மீண்டும் சித்ராவுக்கு வழிவிட்டாள். ‘என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்’ என்று அவர் குரல் உருகி வழிந்தது. எத்தனை அழகான பாட்டு இது. எதைப்பற்றியும் சட்டை செய்யாமல் அந்த இடத்திலேயே காரை வீத்யோரம் நிறுத்திவைத்து, பாட்டை முழுதாய் ரசித்துக் கேட்டால் என்ன? ஜெயச்சந்திரனின் காந்தக்குரல் தொடர்ந்து தாலாட்டியது. “இரவைத் திறந்தால் பகல் இருக்கும். என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய். என் மேல் …” படக்கென்று சுயநினைவு வந்து கண்களைத் திறந்தவன், சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்ததை இறுதிக் கணத்திலே கவனித்துச் சடுதியாக பிரேக் போட, கார் ஒருமுறை தூக்கிக் குலுங்கி நின்றது.