நேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு, ‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’ பதிலுக்கு நான், ‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’ சிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை.