இப்பக் கொஞ்சக் காலமாகவே எனக்கு நாய்களின்மீது ஒரு தனிப்பாசம் வர ஆரம்பித்துள்ளது. நான் நித்தமும் நாய்களோடு வேலை செய்யும் அனுபவத்தில் சொல்கிறேன். அதுகள் அவ்வளவுக்கு மோசமென்று சொல்வதற்கில்லை. நாய்கள் மீது ஒருவித கரிசனைகூட எனக்கு வந்துவிட்டது. அதுகளும் என்ன செய்யும் சொல்லுங்கள்? அதுகளாக வந்து என்னை எடுத்து வளர்த்துவிடு என்று கெஞ்சியதா? இல்லையே. நீ, மனுசன், உனக்கு ஒரு அடிமை வேணும் எண்டதுக்காக நாயை வாங்கி, நலமடிச்சு வளர்த்திட்டு, நாய்கள் கியூட் என்கிறாய், நாய் நன்றியுள்ள மிருகம் என்கிறாய், நாய் வளர்ப்பது நல்லது என்கிறாய், நாய் வீட்டில் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி சிறக்கும் என்றும் சொல்கிறாய். நாய்களோடு கூட வளர்ந்தால் இம்மியூனிட்டி அதிகமாகும் என்கிறாய். இப்படி எல்லாமே நாய்களால் உனக்கும் நீ பெத்ததுகளுக்கும் என்ன நன்மை என்று வரிசைப்படுத்துகிறாயே ஒழிய நாய்களைப்பற்றி நீ எப்பனேனும் யோசித்தாயா? கேட்டால் நாய்க்கும் என்னைப்பிடிக்கும் என்று சொல்கிறாய். கூப்பிட்டோன என்னட்ட ஓடிவரும் என்கிறாய். நாய்களுக்கு ஊருலகத்தில அப்பிடி என்னதான் பிரச்சனை? என்று திருப்பி என்னையே கேட்கிறாய். அப்ப...