சென்றவாரம் எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய இலக்கம். “தம்பி நான் மகாலிங்கம் கதைக்கிறன். உங்கட அப்பாண்ட பழைய பிரண்ட். ஒஸ்ரேலியால வந்து நிக்கிறன் … அவரோட கதைக்கலாமா?” அப்பாவிடம் போனைக் கொடுத்தேன். அப்பாவும் அந்த மகாலிங்கம் அங்கிளும் பேச ஆரம்பித்தார்கள். தியத்தலாவை, நொச்சியாகமை, குமரப்பெருமாள் அண்ணன், சேர்வெயிங் டிபார்ட்மெண்ட், ரெமி மார்டின், பெர்ணாண்டோ, எச்.என்.பெரேய்ரா, டோஹா, பாரெயின், தியோடலைட், டோடல் ஸ்டேசன், ஶ்ரீகரன், ஒரேட்டர் சுப்ரமணியம் என்று பொதுவாகவே இரண்டு நில அளவையாளர்கள் பேசிக்கொள்ளும்போது அடிபடும் சொற்கள் மீண்டும் கேட்டன. அவர்கள் சொல்லிக்கொண்ட பெயர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நில அளவை உபகரணங்களும் பாவனையில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். பேசிமுடியும்போது அப்பா மகாலிங்கம் அங்கிளுக்கு வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அவ்வளவுதான். இனி ஒரு வார இறுதியில் மகாலிங்கத்தாரின் மகனோ மகளோ காலையில் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுப்போனால் இரவு உணவு முடிந்து பத்துப் பதினொரு மணிவரைக்கும் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா அப்...