குளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. இலையுதிர்காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. கடந்த தடவை வசந்தகாலத்துக்கும் இதுதான் நிகழ்ந்தது. வசந்தத்தையும் இலையுதிரையும் கோடையும் குளிரும்தான் நமக்கு ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது. வீட்டில் அப்பிள் மரம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து அப்பா ஓமந்தையால் கொண்டுவரும் நான்கு அப்பிள்களை முன்வீடு பின்வீடு என்று எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்தக் காலம் என்று ஒன்றுண்டு. நான்காய், எட்டாய்ப்பிரித்து அதிலொரு துண்டு கிடைக்கும். தீர்ந்துவிடுமே என்று நன்னி நன்னி சாப்பிட்டது. காலையில் காருக்குள் ஏறும் முன்னர் மரத்தில் எட்டி ஒன்றைப் பிடுங்கி, பக்கத்துப் பைப்பிலேயே கழுவி, கடித்தபடி புறப்படுகிறேன். இதனை முன்வீட்டு லலிக்குச் சொன்னால் புன்னகைப்பான் என்று நினைக்கிறேன்.