“உண்டா” என்றொரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் மாவோயிஸ்டுகளின் பிரசன்னம் உள்ள கிராமங்களுக்குத் தேர்தல் கடமைக்காகச் செல்லும் ஒருதொகுதி காவல்துறையினரின் கதை. கலவரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மறியல் கடவைகளையும் லத்திகளையும் சில துப்பாக்கிகளையும்தான் அவர்கள் துணைக்குக் கொண்டு செல்கிறார்கள். போதுமான தோட்டாக்கள்கூட அவர்களிடம் இல்லை. அவர்களில் பலர் பயிற்சியின்போது சுட்டதற்குப்பின்னர் துப்பாக்கியையே பயன்படுத்தியதில்லை. தாக்குதல் அனுபவம் இல்லாதவர்கள். மிக எளிமையான சாதாரண மனிதர்கள். சரியான தயார்படுத்தல் இன்றி எப்படி மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை அந்தக் காவலர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஈற்றில் மாவோயிஸ்டுகளிடமிருந்து சனநாயகத்தைக் காக்க வந்தவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்களின் கையாட்களிடமிருந்துமே சனநாயகத்தைக் காக்கப் போராடுவதாகக் கதை முடிகிறது.