நீண்ட நாட்களின் பின்னர் சிறப்பானதொரு சிறுகதைத் தொகுதி வாசிக்க கிடைத்தது. ஜேகேயின் “சமாதானத்தின் கதை” தொகுப்பு வெகுவாக என்னைப் பாதித்திருக்கின்றது. அகழ் மின்னிதழில் வெளிவந்த அவருடைய “டைனோசர் முட்டை” என்ற சிறுகதையே இத்தொகுப்பினை வாசிக்கத் தூண்டியது என்று கூறலாம். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இசையில் வெவ்வேறான சுருதியுடன் ஒலித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. பதினொரு கதைகளும் வெவ்வேறான மொழிநடை . இதுவே இந்த தொகுதியின் முக்கியமான பலம் எனக் கருதுகின்றேன். போர், புலம்பெயர் வாழ்வின் வண்ணத்தை நுட்பமாக மாற்றி அன்றாடத்தை குலைத்து விடுவதை ஜேகே அவருடைய கதைகள் வழியாக கலையமைதியுடன் சாதித்திருக்கிறார். பெண்ணியம் குறித்த கற்பனாவாத சாய்வுகளோ அல்லது பிரச்சார முழக்கங்கள் உரத்த குரலில் ஒலிக்கும் விமர்சனமோ அவருடைய கதைகளில் எழவில்லை. அதேநேரத்தில் பெண்ணின் அக உணர்வுகளை ஆண் எழுதுவது என்பது அசாதாரண விடயம். ஆனால் இத்தொகுப்பில் சில இடங்களில் ஜேகே அதனை சாதித்துக் காட்டியிருக்கின்றார். ஜேகேயிற்கு வாழ்த்துக்கள்