ரசங்கவை நான் கடைசியாகக் கொழும்பில்தான் பார்த்ததாக ஞாபகம். இருபது வருடங்களுக்கு முன்னர். அவன் இலண்டன் செல்லப்போவதாகச் சொன்னதும் அலுவலகத்தில் எல்லோரும் அவனுக்குப் பிரியாவிடை விருந்து ஒன்று கொடுத்தோம். பணம் சேகரித்து சில பரிசுகளும் வாங்கி வழங்கினோம். அதன் பிறகு நானும் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. இரண்டாயிரத்து ஒன்பதில் என்னை அவன் தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். நான் பதிலுக்கு அவனையும் ஒரு அரச தீவிரவாதி என்றேன். ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து உருவாகும் தீவிரவாதியைவிட அதிகாரத்திலிருக்கும் தீவிரவாதியே ஆபத்தானவர் என்று நான் பதில் சொல்லியிருந்தேன். இருவருக்கும் சண்டை. அவன் என்னை நட்பு விலக்கினானா அல்லது நான் அவனை நட்பு விலக்கினானா என்று தெரியவில்லை. அவன் என் பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற பயத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் நான் ஊர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனாலும் லின்க்ட் இன்னில் அவனின் நடவடிக்கைகளை அடிக்கடி கவனிப்பேன். ராஜபக்ச சகோதரர்களின் தீவிர ஆதரவாளன் அவன். நாட்டின்மீது அதீத பற்றும் கொண்டவன். ஒருமு...