ஆர்த்திகனின் ‘ARN’ காளான் கடை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர் மத்தியிலும் மிகவும் பிரபலம். என் அம்மாகூட பல தடவைகள் இந்தக்கடையைப்பற்றிய காணொலியை யூடியூபில் பார்த்துவிட்டுச் சிலாகித்ததுண்டு. இம்முறை ஊருக்குச் சென்றபோது ஆர்த்திகனோடும் அவரது குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. கூடவே அவர்களது காளான் உணவுடனும். பலாலி றோட்டில், பரமேஸ்வராச்சந்திக்கும் தபால்பெட்டிச்சந்திக்கும் இடையே வீதியோரமாக இவர்களின் பெட்டிக்கடை அமைந்துள்ளது. கடையில் நின்று வியாபாரம் செய்வது ஆர்த்திகனின் தம்பியான குமரன். ஆர்த்திகனும் அவ்வப்போது அதில் இணைந்துகொள்வதுண்டு. பின்னேரங்களில் காளான் பஜ்ஜியும் சூப்பும் கட்லட்டும் விற்பார்கள். தவிரக் காளான் பிரைட் ரைஸ், காளான் டெவில் போன்றவையும் ஓர்டருக்கு விநியோகம் செய்தார்கள். யாழில் நின்ற ஒன்றரை மாதங்களில் ஐந்தாறு முறையாவது அந்த பஜ்ஜியும் சூப்பும் சாப்பிட்டிருப்போம். நாங்கள் நின்ற காலம் வேறு ஒரே அடை மழையா, பெட்டிக்கடை முன்னே நின்று மொறு மொறு பஜ்ஜியும் ஆவி பறக்கும் கார சூப்பும் உட்கொள்ளும் அனுபவமே பரவசமாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சுப்பர் மார்க்கட்...