எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் ஒஸ்டின் வைத்தியசாலையில்தான் அப்பாவுக்குப் புற்று நோய் சிகிச்சை இடம்பெற்றது. புற்று நோய் சிகிச்சை என்பது ஓரிரு நாட்களில் நிகழ்ந்து முடிவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அப்பருக்கும் இது வருசக்கணக்கில் இழுத்தது. பல்வேறு சோதனைகள். ரேடியேசன், கீமோ, சத்திர சிகிச்சை என ஒன்று மாறி ஒன்று எப்போதும் வந்துகொண்டேயிருக்கும். ஒரு கட்டத்தில் முட்டி மோதி நோயைக் கட்டுப்படுத்திவிட்டாலும் வைத்தியசாலை விட்டுவைப்பதாக இல்லை. அடிக்கடி அவர்கள் அப்பரை அழைத்து எப்பன் எங்காவது நோய் மறுபடியும் எட்டிப்பார்க்கிறதா என்று மேன்மேலும் சோதனை செய்துகொண்டேயிருப்பார்கள். அப்பாவும் அனைத்துக்கும் தயாராகவே இருந்தார். தன் நோயைக் குணப்படுத்தவேண்டும், ஊருக்குப் போகவேண்டும் என்ற ஓர்மம் முக்கிய காரணம் என்றாலும் அயர்ச்சியோ வெறுப்போ இல்லாமல் அவர் அங்குத் தொடர்ச்சியாகப் போய் வந்தமைக்கு வைத்தியசாலையின் கவனிப்பும் ஒரு காரணம். அந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் வரவேற்பு மண்டபம் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் மண்டபத்தைப்போல அழகாகவும் பொலிவுடனும் இருக்கும். அப்பர் போனவுடனேயே உள்ளே ...