அன்றைக்கு ‘ ஸ்ரீ லங்கா பிரஸ் ’ முதலாளியின் வீட்டுவாசலில் நானும் நான்கு நண்பர்களும் நின்றது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது . கதவை அரைவாசி திறந்துவைத்தபடி ‘ என்ன தம்பி , டிக்கட் விக்க வந்திருக்கிறீங்களா ?’ என்று கேட்ட முதலாளியிடம் தயக்கமாகச் சொல்கிறோம் . “ ஒரு புத்தகம் அடிக்கோணும் அங்கிள் ” அப்போது பன்னிரண்டு வயசு . அம்மா காற்றடிக்கவும் அவ்வப்போது கிழங்கு ரொட்டி வாங்குவதற்கும் தந்த பணத்தை மிச்சம் பிடித்து ஒரு நூறு ரூபா சேர்த்து வைத்திருந்தேன் . பிரேம்நாத் , கொஞ்சம் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவன் , ஐந்நூறு ரூபாய் சுளையாக வீட்டிலிருந்து கொண்டுவந்தான் . ரங்கன் அவன் பங்குக்கு ஒரு நூறோ , இருநூறோ . வாயைக்கட்டி வயித்தத்கட்டி கையில் எண்ணூறு ரூபாய்களும் கொஞ்ச சில்லறைகளும் சேர்த்துவிட்டோம் . புத்தகம் பதிப்பிட .