நி த்தியகல்யாணியில் தேடித்தேடிப் பூ ஆயும் அதிகாலை . மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரக்கொப்பை , ஆட்டுக்குக் குழை குத்தும் கம்பியால் எட்டிப்பிடித்து , கொளுவி வளைக்கும்போது , சொட்டுச் சொட்டாக கொஞ்சம் பனித்துளி , தலை , முகம் , கழுத்தடி எல்லாம் விழுந்து உடம்பு சில்லிடும் . திருவிழாவில் வாங்கிய சின்னப் பனை ஒலைப்பெட்டியில் , மொட்டுத் தவிர்த்து , பூக்களைப் பிடுங்கிப் போட்டவாறு செவ்வரத்தைக்குத் தாவுகிறேன் . ஒரே மரத்தில் எத்தனை வகைப் பூக்கள் ? அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஒடித்துப் போடுகிறேன் . தோட்டத்தில் நின்ற கனகாம்பரம் , ரோசா , கடதாசிப்பூ மரங்களில் கை வைப்பதில்லை . பேப்பர் பூ சாமிக்கு வைக்கக்கூடாது . கனகாம்பரம் கலியாண வீடு , சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்குத் தேவை . ரோசாப்பூவைப் பிடுங்கினால் அம்மா திட்டுவார் . அது விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்கில் போறாமைப்படுவதற்கு . பொறாமைப்படுவார்கள் .