எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை. நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளிகளை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப்பிக்கொண்டேயிருப்பாள். ஒரு நாய் தூங்கும்போது மற்ற நாய் சொறிவது. நாய் நீச்சல் குளத்தில் பாய்ந்து பந்தை மீட்பது. தவறுசெய்துவிட்டு நாய் பாவமாய் பாவ்லா காட்டுவது. இப்படித் தினமும் தூங்குவதற்கு முன்னர் அவளிடமிருந்து பல நாய் காணொளிகள் எனக்கு வருவதுண்டு. அதற்கு உடனேயே ஹார்ட்டின் போட்டுவிட்டுத்தான் நான் தூங்கப்போவேன். சில சமயங்களில் அவள் அந்தப்பக்கம் தூக்கம் வராமல் தவிப்பதுண்டு. அப்போது என்னையும் அவள் நிம்மதியாகத் தூங்கவிடமாட்டாள். ஐந்து நிமிடத்துக்கொருமுறை எனக்கு மெசேஜ் வந்துகொண்டேயிருக்கும். அல்லது ஸ்டோரியில் டாக் பண்ணுவாள். இன்னொருவருடைய போஸ்டிலே சென்று “டேய் சேகர், இத பாத்தியாடா?” என்று எ...